உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது
சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) இன்று கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 595 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் COVID-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையை 7,161 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2, 391 நோயாளிகள் இதுவரை குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். மேலும் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் கொரோனா வைரஸால் உயிர் இழந்தனர் என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை 237 ஆக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.
சீனா மற்றும் ஈரானைத் தவிர, தென் கொரியாவில் 7,382 பேர் பாதிக்கப்பட்டதுடன், 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இத்தாலியில் 7,375 பாதிக்கப்பட்டதுடன், 366 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.