Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

என்னடா இது ஆஸ்கருக்கு வந்த சோதனை…!

இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டின் பிரமாண்ட திருவிழாவான 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென் கொரிய மொழிப்படமான ‘பாராஸைட்’ திரைப்படம் வென்றது. இதன் மூலம் ஆங்கில மொழிப்படங்கள் அல்லாமல் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் வெல்லும் முதல் படம் என்ற வரலாற்றை பாராஸைட் படைத்தது.

இயக்குநர் போங் ஜோன் ஹோ இயக்கத்தில் வெளியான பாராஸைட், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனைப் படைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் ஆஸ்கர் நிகழ்ச்சி குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தியை தற்போது ஏபிசி நெட்வொர்க் வெளியிட்டுள்ளது. உலக முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதே அந்த செய்தியாகும்.

அதன்படி, இம்முறை நடைபெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியை 23.6 மில்லியன் பார்வையாளர்களே பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த 18 முதல் 49 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களின் அடிப்படையில் 5.3 என்ற டிஆர்பி ரேட்டிங்கே இம்முறை ஆஸ்கருக்கு கிடைத்துள்ளது.

கடந்தாண்டு 29.6 மில்லியன் பார்வையாளர்களையும், 7.7 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியை கண்டுகளித்த பார்வையாளர்களின் அளவு இம்முறை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் நிகழ்ச்சி நடைபெறுவதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், ஆஸ்கர் மட்டுமல்லாமல் கிராமி, எம்மி விருதுகள் நிகழ்ச்சியை காணும் பார்வையாளர்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும் ஏபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஆஸ்கருக்கு பார்வையாளர்கள் குறைந்தாலும் அமெரிக்க தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வாக ஆஸ்கர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |