கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.. இந்தநிலையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடியாது என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது பற்றி அந்தசங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது, ”கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை..
நீண்ட நாட்களாகப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளோம்.. தற்போது மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால் ரூ 4 லட்சம் வரை செலவாகும்.. எனவே, பேருந்துகள் ஓடாத 5 மாத காலத்திற்குச் சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துவருகிறோம்.
இது சம்பந்தமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.. ஆனாலும் அரசு இது பற்றி சாதகமான முடிவு எதையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் அரசு எப்போது இறுதி முடிவு எடுக்கிறதோ அப்போது தான் ஆம்னி பேருந்துகள் இயங்கும்.. அதுவரை அவை இயக்கப்படாது ” எனத் தெரிவித்துள்ளார்.