சாலமன் தீவில் சீன ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டமானது வன்முறையாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தைவான் நாட்டுடனான தூதரக உறவுகளை துண்டித்துவிட்ட சாலமன் தீவின் பிரதமர் மனாசே சோகாவரே தற்போது சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் பெரும்பாலான மாகாணங்களில் சீனா பக்கம் சாயும் சாலமன் தீவு அரசின் இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சாலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனியராவில் பிரதமர் மனாசே சோகாவரே-ஐ பதவி விலககோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக மாறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சாலமன் தீவுகளில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், சைனா டவுன் பகுதியில் உள்ள சீன நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சீனா தங்கள் நாட்டிற்கு சொந்தமான உடைமைகள் எரிக்கப்பட்டதற்கும், சீன நாட்டினர் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.