இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காங்கர் கிராமத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சி கடந்த 5 வருடங்களாக வழிப்பறி செய்து வருகிறது.
மாநிலத்தில் ஒரு வளத்தை கூட மிச்சம் வைக்காமல் பெரிய தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். எனவே பாஜக கட்சியின் ஆட்சி மீண்டும் வராமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்து விட்டால் பின் வருந்த நேரிடும். மாநிலத்தை நலிந்த மாநிலம் என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது எல்லாம் தேர்தலை முன்னிட்டு கண்துடைப்பு பேச்சு தான். எவ்வளவு விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்.
ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை, எளிய மக்களை பாஜக மறந்துவிட்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். கடந்த 5 வருடங்களாக ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெய்ராம் தாகூர் 63,000 காலி பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளார். ஆனால் தற்போது ஆட்சியை தொடர்வதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்.
எனவே மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்கள் நலனுக்காக உழைக்கும் ஒரே தேசிய கட்சி. எனவே மீண்டும் மாநிலத்தில் பாஜக ஆட்சி வராமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காமல் மக்கள் நன்றாக யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.