Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஒரே கிக்… ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!

சமூக வலைதளங்களில் வைரலான கேரள அரசுப் பள்ளி சிறுவர்களின் மிரட்டலான ஃப்ரீகிக் கோல் வீடியோ கால்பந்து ஜாம்பவான்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டாலும், கேளரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகள் விளையாடப்படுவதைதான் பார்க்க முடியும். ஏனெனில் அந்த அளவிற்கு கேரளா, மேற்குவங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் முன்னிரிமை அளிப்பார்கள்.

அதிலும், கேரளாவில் கால்பந்து போட்டிக்கு எப்போதும் தனி மவுஸ் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கால்பந்து போட்டி மீது அவர்கள் காட்டும் ஆர்வம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்.

அந்த வகையில், மலப்புரம் அரசுப்பள்ளி மாணவர்களின் ஃப்ரீகிக் கோல்தான் சமூக வலைதளங்கள் பக்கம் எங்கு பார்த்தாலும் தென்பட்டுவருகிறது. இந்த மெர்சல் ஃப்ரீகிக் கோலுக்கு சொந்தக்காரர்கள் எல்.பி அரசுப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்களான பிரத்யூஷ், லுக்மனுல் ஹக்கிம், அஸ்லாஹ், மற்றும் அடில்தான்.

கால்பந்து போட்டியில் ஃப்ரீகிக் அடிக்கும் போது, எதிரணி கோல்கீப்பரை குழம்ப வைக்கும் வகையில் பிரத்யூஷ், லுக்மனுல் ஹக்கிம், அஸ்லாஹ் ஆகியோர் பந்தை அடிக்க வந்தாறு அடிக்காமல் விட்டுச்செல்ல அதை அடில் நேர்த்தியாக அடித்து கோலாக்கினார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்ஹாம் அடிக்கும் ஃப்ரீகிக் கோல் போல இந்த சிறுவர்களின் ஃப்ரீகிக் இருந்தது.

இதைத்தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான இந்த வீடியோவை பார்த்து உலகக் கோப்பை வென்ற முன்னாள் ஜெர்மினி வீரர் லோதர் மாட்டஸ், லிவர்பூல் அணியின் ஃபார்வர்டு வீரர் ஸெர்டான் ஷகிரி, ஆகியோர் சிறுவர்களை வெகுவாக பாராட்டினர்.

மேலும்,பார்சிலோனா அணியின் நட்சத்திர மிட் ஃபீல்டர்களான டி ஜாங், இவான் ரகிடிச், பேயர்ன் முனிச் அணியைச் சேர்ந்த கோட்டின்ஹோ, பிஎஸ்ஜி அணியின் டி மரியா உள்ளிட்ட கால்பந்து வீரர்கள் பலரும் இந்த வீடியோ லைக் செய்துள்ளனர்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50 லட்சத்திற்கு மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மஞ்சப்படா ரசிகர்கள் இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்ய அதை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்தும், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்கும் செய்துள்ளனர்.

இப்படி ஒரு ஃப்ரீகிக் மூலம் ரத்யூஷ், லுக்மனுல் ஹக்கிம், அஸ்லாஹ், மற்றும் அடில் ஆகிய நான்கு சிறுவர்கள் ஒட்டுமொத்த உலகத்தையே தங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

https://www.instagram.com/p/B7kxL7TJdO3/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |