இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதனிடையே இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்ததி தொடரையும் வென்றது. இதன்மூலம் உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 200ஆவது வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா 119, விராட் கோலி 89, ஷ்ரேயாஸ் அய்யர் 44* ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இதில் 85 ரன்கள் விளாசிய கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கேப்டனாக களமிறங்கிய 82ஆவது இன்னிங்ஸில் அதிவேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பாக தோனி 127 இன்னிங்ஸில் ஐந்தாயிரம் ரன்கள் கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் தற்போது தோனிக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன்களான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (131 இன்னிங்ஸ்), தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் (135 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.
இது தவிர இந்திய அணியின் கேப்டனாக அனைத்து விதமான போட்டிகளிலும் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற தோனியின் மற்றொரு சாதனையையும் கோலி தகர்த்துள்ளார். கோலி, இதுவரை 199 சர்வதேச இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரத்து 208 ரன்களை எடுத்துள்ளார். தோனி 330 இன்னிங்ஸில் 11,207 ரன்கள் குவித்ததே சாதனையாகப் பார்க்கப்பட்டது.
5⃣0⃣0⃣0⃣ runs as ODI Captain for @imVkohli.
Fastest to achieve this feat 👑 pic.twitter.com/Dw5toHvqBg— BCCI (@BCCI) January 19, 2020