தேனி மாவட்டம் குமுளி அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இங்குதான் கொண்டை ஊசி வளைவு அதிகமாக உள்ளது. இந்த மலைப் பாதைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் மக்களும், கம்பம் பள்ளத்தாக்கு ஏலக்காய் மையங்களுக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகளும் இந்த பாதையை தான் அதிகம் பயன்படுத்துவர்.
இந்நிலையில் குமுளியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மலைப்பாதையில் மாதா கோவில் ஒன்றின் அருகே திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பாறையின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் போட்ட அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இதில் 10 பேர் லேசானது முதல் மிதமான காயம் அடைந்து இருந்த நிலையில்,
அவர்களை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க கொக்லைன் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் பஸ்சை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். 35 பேர் சென்ற அரசு பேருந்து மலை உச்சியின் பாதையில் கவிழ்ந்ததில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.