நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பட்டறை மேட்டில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் தான் அவரது வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் ஜெயகுமார் சடலமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.. பின்னர் மோப்ப நாயை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணையில் ஜெயக்குமாரின் தலையில் பலமான ஆயுதத்தை வைத்து தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது.. அதன் பின்னர் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயக்குமார் அண்ணா நகர் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்தது. எனவே இவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.