Categories
மாநில செய்திகள்

சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேனா வழங்கியதால் பெரும் பரபரப்பு!

செல்போன் கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேனாவில் எழுதி வாடிக்கையாளருக்கு பரிசாக அளித்ததால் இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை ரிச்சி தெருவில் அற்புதா மொபைல்ஸ் செல்போன் கடை நடத்தி வருபவர், தினேஷ். இவர் தனது கடையில் செல்போன் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக எழுதிய பேனாவை பரிசாக அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கடைக்கு எதிரே செல்போன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர் பரிசாக இது போன்ற பொருளை அளித்தால் வியாபாரம் பாதிக்கும் எனக் கூறி தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தினேஷின் சகோதரர் ஒருவர் இந்து முன்னணியில் பிரமுகராக இருக்கிறார். இதனால், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரங்களை நுகர்வோர்களிடம் வழங்கியதால் சிறு பிரச்னை பூதாகரமாக வெடித்தது.

இதனைத்தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த அமைப்பினரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் தினேஷ் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தன்னை சிலர் மிரட்டுவதாகப் புகாரளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து விசாரணை செய்து, கூடியிருந்த கூட்டத்தை சுமுகமாக பேசி அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |