லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.ஏனென்றால் தபா இதுபோன்று பல்வேறு விலை உயர்ந்த நகைகளை வெவ்வேறு இடங்களில் விற்றுள்ளார். இந்த நகைகளை 75 வயதுடைய பிர்யாள் என்ற இளவரசிக்கு சொந்தமான லண்டன் வீட்டில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. அந்த வீட்டில் கொலம்பியா நாட்டு பெண் வேலை செய்து வந்தார்.
அவர் இளவரசியின் வீட்டில் இருந்த வைர மோதிரங்கள், கை கடிகாரங்கள், கம்மல்கள் மற்றும் ஆடம்பர கைபைகளை திருடி தனது உறவினரான தபாவிடம் கொடுத்து வந்துள்ளார். அதன்பிறகு தபா அவற்றை விற்று வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை லண்டனில் உள்ள இளவரசியின் வீட்டில் திருடிய மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.