லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை தனது படங்களில் சொல்வதுடன், கோலிவுட் சினிமாவுக்கு நன்கொடையாக பல புதுமைகளை அளித்து வரும் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இசைஞானி இளையராஜாபெரியப்பா. பாடலாசிரியர், இசையமைப்பாளர் பல சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநரான கங்கை அமரனின் மகன். இப்படி இவரது பெயருக்கு முன்னாள் பல்வேறு டேக்குகள் இருந்தாலும், தனக்கான பாணியில் தனித்துவமாக திரையுலகில் பயணித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் வெங்கட் பிரபு.
வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய இவர் நண்பர்கள் மற்றும் தம்பியும், நடிகருமான பிரேம்ஜியோடு இசைக்குழுவை நடத்தினார். ஏராளமான இசைக் கச்சேரிகளை செய்து கொண்டிருந்த வெங்கட் பிரபுவை அவரது தந்தை கங்கை அமரன் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் பாதியில் நின்றது. பின்னர் அவர் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸாகாமலேயே முடங்கின.
அடுத்தடுத்து தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கலைந்தபோதும், கலைக்குடும்ப வாரிசாக இருந்ததால் அதே துறையில் சாதிக்க வேண்டும் என முன்னோக்கிய இவருக்கு நடிகனாக மீண்டும் ஒரு வாய்ப்பு. எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் – சினேகா நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் குணச்சித்திர நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இடையே இசைக் கச்சேரி, டிவி சீரியல் வாய்ப்புகள், மியூசிக் விடியோ எனவும் கலக்கினார்.
தல அஜித்துடன் ஜி, தளபதி விஜய்யுடன் சிவகாசி என அடுத்தடுத்து பல படங்களில் தலைகாட்டி வந்த வெங்கட் பிரபு ‘சென்னை 600028’ என்ற காமெடி கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
கிரிக்கெட், நட்பு, பாசம், காதல் இவற்றுடன் நிறைய காமெடி என வெரைட்டியான கலவையுடன் அமைந்திருந்த படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டாகியது. இந்தப் படத்துக்கு பின்னர் முதல் சர்வதேச டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால், படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.இதற்கு அடுத்து காமெடியுடன் கலந்த திரில்லர் படமாக ’சரோஜா’, காமெடி, ரெமான்ஸ் கலந்த ஜாலி ரெயிடாக ’கோவா’, ஆக்ஷன் கலந்த திரில்லராக ’மங்காத்தா’, ’பிரியாணி’, திகில் படமாக ’மாசு என்கிற மாசிலாமணி’ என தனது ஸ்டைலில் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். கடைசியாக தனது முதல் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘சென்னை 600028 பார்ட் 2’ தந்து குஷிப்படுத்தினார்.
வெங்கட் பிரபுவுக்கு ஹீரோ என்றால் அலர்ஜி. அதனால் தனது படங்களில் ஹீரோக்களை நடிக்க வைத்திருப்பார். குறைந்தது அவர் படங்களில் இரண்டு ஹீரோக்களையாவது காணலாம். அதேபோல் ஹீரோயிசம் செய்யும் ஹீரோக்களையெல்லாம் வில்லனிசம் செய்ய வைத்து, ரசிகர்களை ரசிக்க வைத்ததுடன் கோலிவுட் இயக்குநர்களுக்கு புதுப்பாதை அமைத்து கொடுத்தார்.
தல அஜித்தின் 50ஆவது படமாக வெளிவந்த ‘மங்கத்தா’ படத்தில் அவரை சால்ட் அண்ட் பெப்பர் என வித்தியசமான தோற்றத்தில் கண்டு ரசிக்க வைத்தது மட்டுமில்லாமல், வில்லத்தனமான கேரக்டரையும் அவருக்கு தந்து கிரிப்பிங் திரைக்கதையுடன் படத்தை கொண்டாட வைத்திருப்பார். இந்தப் படம் முதல், முற்றிலுமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கே மாறினார் தல அஜித்.
இன்றைய டிஜிட்டல் உலகில் நாட்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதுடன், விமர்சனம், கிண்டல் என உலகம் முழுவதிலும் ஒரு புறம் ட்ரெண்டாக்கப்படுகிறது. அந்த வகையில் அவை அனைத்தையும் அப்டேட்டாக தனது படங்களில் ஆஜராக செய்திருப்பார் ’விபி’ என அழைக்கப்படும் வெங்கட் பிரபு.
மிக முக்கியமாக காமெடி, ரெமான்ஸ், சென்டிமென்ட், எமோஷன் என அனைத்து கலவையும் கொண்ட திரைக்கதையுடன் அமைந்திருக்கும் தனது சினிமாவின் க்ளைமாக்ஸை ரசிகர்களிடம் ஒப்படைக்கும் மாயஜாலத்தை எல்லா படங்களிலும் கடைபிடிக்கிறார். என்னாச்சு, அவ்வளவுதானா என பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் வெங்கட் பிரபுவின் இறுதிக்காட்சிகள் அவருக்கான ட்ரேட் மார்க்காக திகழ்கிறது.
கதை பழையது, இல்லை திருடியது என பல்வேறு விமர்சனங்கள் இவரது படம் பற்றி கூறப்பட்டாலும் திரைக்கதையும், காட்சியமைப்பும் அண்மையில் நடந்த நிகழ்வுகளை பகடி செய்து ரசிக்க வைப்பது இவரது தனி ஸ்டைல். தற்போது இயக்கி முடித்துள்ள ’பார்ட்டி’ படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், மிர்ச்சி சிவா, ‘கயல்’ சந்திரன், ஷாம், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, இவர்களில் யார் முன்னணி கதாபாத்திரம் என குழப்ப வைத்திருப்பதுடன், படம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக எண்ட் கார்டில், A Film By’ என இயக்குநர்கள் தங்களது பெயர்களை குறிப்பிடுவது வழக்கம். ஆனால் அதிலும் வித்தியாசமான பாணியில் தனது பெயருடன் சேர்ந்து படத்தின் மையக்கருவையும் குறிப்பிட்டு கெத்து காட்டி வருகிறார்.
‘A Venkat Prabhu Film’, ‘A Venkat Prabhu Holiday’, ‘A Venkat Prabhu Game’, ‘A Venkat Prabhu Diet’, ‘A Venkat Prabhu’, A Venkat Prabhu Sixer’ ‘A Venkat Prabhu Reunion’என இதுவரை 7 படங்கள் மூலம் ரசிகர்களை என்டர்டெயின் செய்துள்ள இவர், தற்போது ‘A Venkat Prabhu Hangover’ என்ற டேக் லைனுடன் ‘பார்ட்டி’ படத்துக்காக ரசிகர்களை காக்க வைத்துள்ளார் இந்த ட்ரெண்ட் இயக்குநர்.