ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 9624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 76746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் 18137 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 410 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும், 27 கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 18570 பதவியிடங்களுக்குமான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலில் முதல்கட்டமாக முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.10 விழுக்காடு வாக்குகளும் இரண்டாம் கட்டம் வாக்குப்பதிவில் 77.73 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
முதல்கட்ட வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட சிறு, சிறு பிரச்னைகள் காரணமாக 30 வாக்கு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 72.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக 9 வாக்குச் சாவடிகளில் ஜனவரி 1ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 59.42 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றது. அதன்படி ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மேலும் வாக்கு எண்ணப்படும் மையங்களில் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.