கடந்த ஒரு வாரமாக கறிக்கோழி விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது கோழிப்பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளாவில் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் கேரளாவில் பறவை காய்ச்சலும் பரவியது. இதனால் அம்மாநில மக்கள் அச்சமடைந்தது மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திலும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன.
குறிப்பாக கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றால் கொரோனா பரவு என்ற வதந்தியால் பொதுமக்கள் அனைவரும் கோழிக்கறியையும், முட்டையையும் புறக்கணித்தனர். இதனால் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கோழி விற்பனையாளர்கள் இறைச்சியை இலவசமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் கோழிக்கறிக்கும், கொரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்தது.
இதனால் தற்போது கோழி, முட்டை விலை நல்ல ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோழிக்கறி விலை 44 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் கோழிப் பண்ணையில் ஒரு கிலோ கறிக்கோழி விலை 7 உயர்ந்து 94 ஆக உள்ளது.