தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை.
அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை செய்யவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத இந்த அரசு சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்கும். பிரதமர் தமிழகத்திற்கு வந்த பிறகு மத்திய அரசு முகமை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பி இருந்தது. அனைத்து கோவில்களிலும் மெட்டல் டிடெக்டர் சரியான முறையில் வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் அண்ணாமலை ஆளுநருடன் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.