5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியையும் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அனந்த் சர்மா உடனிருந்தார்.
அண்ணல் காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு சென்று ராஜபக்ச மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பிப்ரவரி 9ஆம் தேதி வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் சாராநாத் புத்த வழிபாட்டு தலத்திலும் தரிசனம் செய்யவுள்ளார். ராஜபக்சவின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 10ஆம் தேதி பிகார் புத்த கயாவிற்கு சென்று ராஜபக்ச மகாபோதி கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். பின்னர், அவர் திருப்பதிக்கு செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.