வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து சக்திவேல் செல்போனில் ஃப்ரீபையர் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்த விளையாட்டிற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனைதொடர்ந்து அவரது மனைவி வினோதினி சக்திவேலை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அவர் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த மனைவி சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சக்திவேல் வீட்டின் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்த வினோதினி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.