கொரோனாவால் தன் வேலையை இழந்ததால் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் பூர்த்திசெய்ய முறுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன்.
இதுபற்றி அவர் கூறியதாவது, நெய்வேலி தான் எனக்கு சொந்த ஊர். தற்போது தனக்கு 30 வயது ஆகிறது. 2 வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது ஆறு மாத கைக்குழந்தை ஒன்று தனக்கு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து முதுகலைப் பட்டம் பெற்று கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி வந்தேன்.
குடும்ப வாழ்க்கை, கைநிறைய வருமானம், மனதிற்கு பிடித்த வேலை என்று என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது கொரோனா ஊராடங்கினால் என் சம்பள சதவிகிதம் பிடிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.. பின் 3 மாணவர்களை கல்லூரியில் சேர்த்து விட்டால் வேலை உறுதி செய்யப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் கூறியது. இதனால் வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினேன்.. என்னையே நம்பி குழந்தையும், மனைவியும் இருப்பதால் வேறு ஏதாவது வேலை கிடைக்குமா என தேடினேன்..
தற்போதைய சூழலில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் வருமானத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்து வந்த போது தான் எனக்கு ஐடியா தோன்றியது.. வீட்டில் அப்பா சின்னதாக ஒரு மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு ஊரடங்கினால் மொத்த வியாபாரிகளிடமிருந்து வரும் சரக்கு வரவில்லை. சரி சும்மா தானே இருக்கிறோம் என்று நினைத்து குடும்பத்தினரோடு சேர்ந்து முறுக்கு சுட்டு கடையில் கொண்டு போய் வைத்தேன்.
ஒரு கிலோ அரிசி மாவினை பயன்படுத்தி முறுக்கு செய்து கடையில் வைத்த சில மணி நேரத்திலேயே விற்றுப்போனது. இதனை கேள்விப்பட்ட அருகிலுள்ள கடைக்காரர்களும் தங்களுக்கு முறுக்கு வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தனர்..
படிப்படியாக ஆரம்பித்த இந்த வேலை இப்போது தினமும் 5 கிலோ மாவில் குடும்பத்தினருடன் சேர்ந்து முறுக்கு தயார் செய்து 4-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வழங்கி வருகிறேன். இதன்மூலம் அனைத்து செலவுகளும் போக கையில் நாளுக்கு 500 ரூபாய் வருமானம் கிடைக்கின்றது. இத்தகைய வருமானமானது பற்றாக்குறையாக இருந்தாலும், அடுத்த வேலை கிடைக்கும் வரையில் இந்த முறுக்கு வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருவேன் என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். ஆகவே எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் ஒருவர் முழு ஈடுபாட்டுடன் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செய்தால் வெற்றி நிச்சயம்..