தடுப்பூசி முகாமில் ஊராட்சி செயலாளர்கள், தலைவர்கள் ஒவ்வொருவரும் 1௦ நபர்களை தடுப்பூசி செலுத்த அழைத்து வரவேண்டும் என திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பில்லாஞ்சி கிராமம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை இணைந்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வெற்றி குமார் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், சுரேஷ் சௌந்தரராஜன் மற்றும் ஒன்றிய குழுத் தலைவர் குமார் முன்னிலை வகித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி கலந்துகொண்டு சோளிங்கர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் 60 கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். பின்னர் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஒவ்வொருவரும் 5 அல்லது 10 நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என திட்ட இயக்குனர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.