மது கடையை மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் மூடப்படாததால் கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூர் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக அமைந்திருக்கும் சாத்தனூர் வலதுபுற கால்வாய் அருகாமையில் டாஸ்மாக் கடை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 2 வருடங்களாக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இம்மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில் பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில் மதுக்கடை இருப்பதினால் மது விரும்பிகள் போதையில் அந்த வழியாக செல்கின்ற பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு மாதமாகியும் மதுக்கடை மூடப்படாத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் காலை நேரத்தில் மதுக்கடையின் முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சங்கராபுரம் தாசில்தார், சப் இன்ஸ்பெக்டர், ஜெயச்சந்திரன் மற்றும் உலகநாதர் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தாசில்தார் சையத் காதர் 2 நாட்கள் மட்டும் மது கடை திறந்திருக்கும் எனவும் புதன்கிழமை முதல் மது கடை செயல்படாது எனவும் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் மது கடையை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.