தமிழகத்தில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றுள்ள மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் கனிமொழி மக்களவை எம்பியாக தேர்வானதால் அவரது இடமும் காலியாக உள்ளது. காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனுவை ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனுக்களை 9-ஆம்தேதி திரும்ப பெறக் கடைசி நாள் என்றும், 11 – ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு எம்பியை தேர்வு செய்வதற்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக சார்பில் 3 பேரையும், தி.மு.க சார்பில் 3 பேரையும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய இயலும் என்று தெரிகிறது.