பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து நிலவிவந்தது.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதனையடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இன்றுமுதல் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 அமலிலிருக்கும்.