திருவாளப்புத்தூரில் பள்ளம் விழுந்துள்ள பிரதான சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாளப்புத்தூர் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தஞ்சாவூர், காட்டுமன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய பிரதான சாலை ஆகும். இந்நிலையில் இந்த பள்ளம் விழுந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனையடுத்து இந்த பள்ளம் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் சற்று ஒதுங்கி செல்லும்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.