ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்கா அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்தநிலையில், பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே இன்று காலை ஏராளமான ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அத்தாக்குதலில் நேரிட்ட சேதம் குறித்தோ, எத்தனை ராக்கெட்டுகள் வீசப்பட்டது என்பது குறித்த எந்த தகவல் இல்லை. ஒரு வேளை மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியிருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.