மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக- 105 தொகுதிகளும், சிவ சேனா – 56 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் – 54, காங்கிரஸ் – 44 தொகுதிகளையும் வென்றன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த சிவ சேனா, இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என பாஜகவை வலியுறுத்தியது.
இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளாததால் கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியது.
இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, சிவ சேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஒப்புக்கொண்டன.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவரும், கட்சி தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார். சனிக்கிழமை அதிகாலையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
யார் எதிர்பார்த்திடாத இந்த திடீர் அரசியல் திருப்பம் சிவ சேனா, தேசிய வாத காங்கிரஸ் கட்சியினருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. பாஜக தலைமையில் புதிதாக உருவாகியுள்ள கூட்டணி அரசை எதிர்த்து சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனிடையே, பாஜகவின் திடீர் ஆட்சி குறித்து தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் ஜயந்த் பாட்டில் பேசுகையில், “இரவில் தொடங்கப்பட்ட இந்த பாஜக ஆட்சி இரவோடு இரவாக மறைந்து போகும். முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆகியோர் மட்டுமே ஆட்சியில் உள்ளனர். அவர்களுக்குள்ளாகவே அனைத்து அமைச்சகங்களையும் பிரித்து கொள்ள உள்ளார்கள் போல.
சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சியுள்ளனர். தேசிய காங்., சிவ சேனாவிடமே பெரும்பான்மை உள்ளதாக அவர்கள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர், விரைவில் நிலையான ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.