“எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு அக்கா மகளாக நடித்து அசத்தியிருப்பார் பிரியா பவானி சங்கர்.
இதையடுத்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் ‘மான்ஸ்டர்’ படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. தற்போது இவர்கள் ‘பொம்மை’ படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர். மான்ஸ்டர் படத்தில் நடித்த இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ஆம், படப்பிடிப்பின் போது எஸ்.ஜே.சூர்யா தனது காதலை பிரியாவிடம் தெரிவித்ததாகவும், அதை ஏற்க பிரியா முடியாது என மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்து, பிரியா பவானி சங்கர் எனக்கு நல்ல தோழி என்று கூறினார். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டு வெளியான தகவலுக்கு பிரியா பவானி சங்கர் இதுவரையில் பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது முதன் முதலாக பிரியா பவானி சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாதான் பதற்றமாகி பதிலளித்து விட்டார். அதன் காரணமாகவே இந்த விஷயத்தை மிகவும் பெரிதாக பேசினர். உண்மையில் எங்களுக்குள் அப்படி எதுவுமே கிடையாது.
எங்கள் இருவரையும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுவதை பார்த்து தனது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களை நான் எப்படி எதிர்கொள்ள்ளப்போகிறேன் என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது” என்று பிரியா பவானி சங்கர் விளக்கமளித்துள்ளார் .