இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-இல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் நடிப்பதில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்தன.
நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இதனிடையே மக்களின் எதிர்ப்பை உணர்ந்து, நடிகர் விஜய்சேதுபதி படத்தில் நடிக்க மாட்டேன் என்று பின்வாங்கினார். இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்ட நிலையில் சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் கொரோனா சூழல் காரணமாக வேலை இழந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் தான் தவறாக பேசி விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளார். மிரட்டல் விடுத்தவரின் தாயாரும் அழுதபடி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.