கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 392ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று காலை மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்கள், மாவட்ட ஆட்சியகர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டடு கொரோனா பாதித்த மாவட்டங்களை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக வகைக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் 15க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்தால் அது ஹாட்ஸ்பாட் என்று சொல்லக்கூடிய சிவப்பு மண்டலத்துக்குள் வருகின்றது. இதில் நாடு முழுவதும் 170 மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 22 மாவட்டங்கள் இந்த பட்டியலில் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் :
சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் அடங்கும்.
இந்த மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை மிகவும் தீவிரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.