புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனர் சாம்பசிவம் (35). தனது இல்ல திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்குப் அழைப்பிதழ் கொடுக்க கிருமாம்பாக்கம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி, பின் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாம்பசிவத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனை அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சாம்பசிவம் உறவினர்கள் கடலூர் – புதுச்சேரி சாலையில் அமர்ந்து கொலை செய்தவர்களைக் கைதுசெய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.