Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு… போலீசார் சந்தேகம்.!!

திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது சசிகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குண்டடி பட்ட சசிகுமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலைய காவல் துறை ஆய்வாளர் பெரியசாமி சசிகுமார் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதன், முதற்கட்ட விசாரணையில், சசிகுமார் உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்துள்ளார். சசிகுமாரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தும், துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி வெடித்து இருக்க வாய்ப்பில்லை. துப்பாக்கி வைத்துள்ள ஒரு நபர் தோட்டாக்களை வைத்துக் கொண்டு சுத்தம் செய்யமாட்டார்.

சசிகுமாரின் இல்லம்

அவ்வாறு, சுத்தம் செய்யும் போது வெடித்திருந்தாலும் தோட்டா நேராக நெற்றிப் பொட்டில் குறி பார்த்து, பாய்ந்திருக்க வாய்ப்பு குறைவு. எனவே இந்தச் சம்பவம் பெரும்பாலும் தற்கொலைக்கான காரணமாகத் தெரிகிறது. எனினும் வேறு யாரேனும் அவரை சுட்டார்களா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |