ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மது கடையை மூடுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள வட்டாணம் ஊராட்சி துணை தலைவர் அய்யப்பன் தலைமையில் தாமோதரன்பட்டினம் கிராம மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தாமோதன்பட்டினம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளதால் தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டாஸ்மார்க் கடைக்கு அடுத்து ஊருணி இருப்பதால் கிராம மக்கள் அங்கு சென்று குளிப்பதால் மது கடைக்கு வருபவர்கள் பெண்களிடம் தகராறு செய்வதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு அனுமதியளித்த நேரத்தை விட கூடுதலான நேரம் கடைகளை திறந்து வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே அப்பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.