சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை அடுத்த கோரிகாடு என்னும் கிராமத்தில் புதர் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இரவோடு இரவாக கொலை செய்யப்பட்ட அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனை கண்ட ஊர்மக்கள் பதற்றத்துடன் சேலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின் சடலம் கிடந்த இடத்தை ஆராய்ந்த பொழுது அங்கு பீர் பாட்டில் ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டது. ஆகையால் வாலிபர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணங்கள் குறித்து கொலையாளிகள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் தனிப்படை ஒன்றையும் அமைத்து விசாரணையில் ஈடுபடுத்தி உள்ளார்.