ரஷ்யாவின் பெரும் பில்லியனர்களில் ஒருவர் மிக்காய்ல் ஃப்ரிட்மேன். அந்நாட்டின் 11ஆவது பெரும் பணக்காரர்களில் ஒருவரான மிக்காய்லின் 19 வயது மகன் தனது எளிமைக்காகச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
தந்தை 13.7 பில்லியன் டாலர் சொத்துகளை தனது பெயரில் கொண்டுள்ள போதும், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் தந்தையை சார்ந்து வாழாமல், தன் இளம் வயதிலேயே மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் எளிமையான இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவருகிறார்.
சென்ற வருடம் லண்டனில் தன் பள்ளிப்படிப்பை முடித்த அலெக்சாண்டர், படித்து முடித்த கையோடு தனது தந்தையைப் போலவே அதிரடியாய் தொழில் முனைவதில் இறங்கி அனைவரையும் ஈர்த்துவருகிறார். தந்தையின் உதவியை எதிர்பாராமல் சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தாலும், தொழிலைப் பொறுத்தவரை அவரது தந்தை மிக்காய்லால் சில வெகுமானங்கள் இருக்கவே செய்கின்றன.
ஆனால் மிக்காய்ல் பெரும் பணக்காரராய் உள்ளபோதும், பெரும் சொத்துகளை எளிதில் வாரிசுகளுக்கு மாற்றம் செய்யும் வழிமுறைகள் ரஷ்ய நாட்டின் சட்டவிதிகளின்படி அவ்வளவு எளிதல்ல. ”ரஷ்யாவில் அரசியலும், வணிகமும் பின்னிப்பிணைந்தவை என்பதை எனது தந்தை என்றுமே கூறுவார். மேலும் தன் சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவே அவர் என்றும் தெரிவித்துவந்துள்ளார்” என்று கூறுகிறார் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்.