இரயில் நிலைய அதிகாரிகள் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததால் விபத்து ஏற்படும் நிலை உருவானது. ஆனால் சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரயில் நிலைய அதிகாரிகள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மொழி பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழி பிரச்னையால் யாருக்கேனும் புரியாமல் இருப்பதை தவிர்க்க ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்று தெற்கு ரயில்வே ஆணையை பிறப்பித்தது. தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்க்கு கவிஞர் வைரமுத்து, அரசியல் தலைவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின், எம்.பி கனி மொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தென்னக ரயில்வே சுற்றறிக்கையை மாற்றம் செய்துள்ளது. அதன்படி குழப்பம் ஏற்படாத வகையில் அதிகாரிகள் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது