நாளை நடைபெற இருக்கும் மறைமுக தேர்தலை முழுகவனத்துடன் நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதை தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு காரணங்களுக்காக 335 பதவியிடங்களுக்கு தேர்தல் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட 335 பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் தவறாமல் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது மட்டுமில்லாமல், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறைமுக தேர்தலின் போது முழுமையாக வீடியோ பதிவு செய்வதுடன் போதிய பாதுகாப்பு வசதிகளையும் செய்து, தயார் நிலையில் இருக்கவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.