வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவர்களைப் பேருந்துகளில் அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திர அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறியவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஒடிசா முதல்வருடன், தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது.