பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்களும் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் பானி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காமல், அங்கு 6,400 மீட்டர் உயரத்தில் 2-வது மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்களை தூக்கிவீசியது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் (மலையேற்றம்) நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.