நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கார்த்திக் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற சேந்தமங்கலம் காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.