நடிகை ராஷி கண்ணா பணம் முக்கியமல்ல நாம் தேர்ந்தெடுக்கும் கதைதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகை. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா. சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் “பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால் கூட நிச்சயம் நடிக்க மாட்டேன்.
கதை பிடித்து இருந்தால் தயாரிப்பாளர் எவ்வளவு குறைவான சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒத்துக் கொள்வேன். நடிகைக்கு ஆத்மதிருப்தி தான் முக்கியம் பணம் முக்கியமல்ல. நான் பணத்திற்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். கதை தேர்வில் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் உங்களுக்கு ஏன் தோல்விகள் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். சில கதைகள் கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கும் பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் நடிப்போம். ஆனால் திரையில் வரும் பொழுது வேறு மாதிரி மாறிவிடும். வெற்றி தோல்வி என்பது நமது கையில் அல்ல. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நான் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.