நெதர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்ததில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்து அரசு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதனால் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நெதர்லாந்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நெதர்லாந்தில் ராட்டர்டாம் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக வெடித்துள்ளது.
பின்னர் சாலையில் நின்று கொண்டிருந்த பல வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் ராட்டர்டாம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கியும் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் பலரை கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.