ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைவதற்கு 6 மாதம் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிது வருகிறார். இவர் ரிசர்வ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களுள் ஒருவராக விரால் ஆச்சார்யா சேர்ந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்திற்கு இடையே கருத்து மோதல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அப்படி எதுவும் கிடையாது, தனிப்பட்ட காரணத்திற்காக தான் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார். இவர் ராஜினாமா செய்ததால் அப்பதவிக்கு மத்திய நிதி ஆணையக்குழுவின் உறுப்பினர் சக்தி காந்ததாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அது உண்மையல்ல என்று ஆர்பிஐ விளக்கமளித்தது. இதனிடையே மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என்று விரால் ஆச்சார்யா முதல் முறையாக பொது மேடையில் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைய 6 மாதம் உள்ள நிலையில், முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.