சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தியால் எப்படி முடியும்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முக ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் தமிழர்கள் ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்? என்று பதிவிட்டுள்ளார்.
சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.
இந்தி மட்டும் எப்படி
இந்தியாவை இணைத்து விட முடியும்?— வைரமுத்து (@Vairamuthu) September 14, 2019