மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவறையில் விழும் அதிசய நிகழ்வு தொடங்கியுள்ளது.
மதுரை முக்தீஸ்வரர் கோயில் மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் உள்ளார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கோயில் கருவறைக்குள் பிரவேசிக்கும். இந்த நிலையில் கோயிலில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் புதன்கிழமை தொடங்கியது. கோயில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக காலை 6.35-க்கு சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் தொடங்கியது.
இதையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் காலை 6.35 முதல் 6.45-க்கும் பின்னர் 7 முதல் 7.10 வரையும் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதைக்காண கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்த சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசம் மார்ச் 23 வரை நீடிக்கும். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 3வது மற்றும் 4வது வாரங்களிலும் கருவறையில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரவேசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.