திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த 31ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அவரை போலீஸ் கைது செய்யக் கூடாது என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார். இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், தினமும் கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.