குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்தத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், விசிக, காங்கிரசின் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 59 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குடியுரிமை மசோதா தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது என்று வலியுறுத்தியது. ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் குடியுரிமை சட்டம் தொடர்பாக ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.