ஸ்வீடன் நாடாளுமன்றம் மக்தலேனா ஆண்டர்சனை நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஸ்வீடனில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு ஸ்டெஃபான் லோஃப்வென் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நிதியமைச்சர் மக்தலேனா ஆண்டர்சன் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை பெற வேண்டிய நிலையில் மக்தலேனா ஆண்டர்சனை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் 349 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்றத்தில் மக்தலேனா ஆண்டர்சனுக்கு 175 ஆதரவு தேவை என்ற நிலையில் 117 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதிலும் 57 பேர் வாக்களிக்காமலும், பேரவைக்கு ஒருவர் வராமலும், 174 பேர் அவருக்கு எதிராகவும் இருந்துள்ளனர். ஆனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஸ்வீடன் நாட்டின் அரசியலமைப்பின் படி பெருவாரியான உறுப்பினர்களின் எதிர்ப்பு பதிவாகியிருக்க வேண்டும். அந்த வகையில் மக்தலேனா ஆண்டர்சனுக்கு எதிராக 175 உறுப்பினர்கள் வாக்கு பதிவாகியிருந்ததால் புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மக்தலேனா ஆண்டர்சன் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.