Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணிந்து வெளியே போங்க… 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்… தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்தில் 3ஆம் கட்டப் பரவலை அடையும் நிலையில், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, கட்டாயம் மாஸ்க் அணிந்து, மக்கள் வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா  ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ள சூழலில் திருமணம், இறப்பு, மருத்துவ அவசரத் தேவைக்காக இ-பாஸ்கள் வழங்கப்பட்டு, கூட்டம் கூடுவது கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தீவிரமாக பரவிவரும் சிவப்பு குறியீட்டு இடங்களான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மேலும் உயர்ந்துகொண்டே வருவதை தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 9ஆம் தேதி வரை 201ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இன்றைய நிலவரப்படி 703ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 104, சேலம் 84, திருவண்ணாமலை 72, மதுரை 57, கடலூர் 64 என மொத்தம் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளன.. இதுவரை,கொரோனா காரணமாக தமிழகத்தில் 84, 226 பேர் பாதிக்கப்பட்டும், 1, 144 பேர் உயிரிழந்து இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |