தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயாரான நிலையில் தமிழக அரசு வேண்டாம் என மறுத்துள்ளது
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக தண்ணீருக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பிரச்னையால் ஒரு சில பகுதிகளில் ஹோட்டல்கள், விடுதிகள், ஐ.டிநிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக அரசு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்பி வைத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சனைக்கு முழு தீர்வு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு உதவுவதற்கு கேரள அரசு முன் வந்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கடும் வறட்சியால் தண்ணீர் இன்றி தவித்து வரும் தமிழகத்திற்கு உதவி செய்ய கேரள அரசு முடிவு செய்தது. 20 லட்சம் லிட்டர் தண்ணீரை திருவனந்தபுரத்திலிருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்ப கேரள அரசு தயாரானது. இது குறித்து கேரள அரசு தமிழக தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டது. ஆனால் தற்போது தேவைக்கேட்ப தண்ணீர் உள்ளதாகவும், தண்ணீர் தந்து உதவ வேண்டாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.