தமிழகத்தில் காய்கறி சந்தை பகுதிகளில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் வெளியே காய்கறி வாங்க சந்தைகளுக்கு செல்கின்றனர்.
காய்கறி வாங்க மக்கள் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சந்தை இருக்கும் பகுதியில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. அனைத்து மக்களும் காய்கறி வாங்க சந்தைக்கு செல்லும் முன் கையை தூக்கி கொண்டு அந்த சுரங்கத்திற்குள் செல்ல வேண்டும். அதன் பின் தான் காய்கறி வாங்க அனுமதியளிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் காய்கறி சந்தை பகுதிகளில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவை தடுக்க கிருமிநாசினி சுரங்கம் அமைப்பதால் பயனில்லை, கைகழுவும் பழக்கத்தில் இருந்து மக்களை கிருமிநாசினி சுரங்கம் திசைதிருப்புகிறது. ஆகவே தமிழகத்தில் காய்கறி சந்தை பகுதிகளில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.