கோவை அருகே பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை அடுத்த சுண்டக்காமுத்தூர் இல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தினால் அவரது வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார்.
அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த வேறு வகுப்பின் ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டுப்பாடம் எழுதாத காரணத்திற்காக சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி அடித்துள்ளார் இதையடுத்து மனவேதனை அடைந்த மாணவன் தனது நண்பர்களிடம் தனது ஸ்கூல் பையை கொடுத்துவிட்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டான். வீட்டிற்கு வெகு நேரம் ஆகியும் பையன் வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் ஊர் முழுக்க தேடத் தொடங்கி நண்பர்களிடம் விசாரிக்கையில்,
ஆசிரியர் சாதிப்பெயரை சொல்லி திட்டி அடித்ததால் கோபம் கொண்டு பாட்டி வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை பெற்றோர்கள் காவல் நிலையத்தில் இதுகுறித்து ஆசிரியர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து மாணவனை ஆசிரியர் சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கிய செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவிய நிலையில்,
இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு திரண்டு ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.